நமக்கென்று ஒரு அழகான திடமான கப்பல் கிடைக்கும், அதில் என்னவெல்லாம் வசதிகள் இருக்கும், எப்படியெல்லாம் அந்த கப்பலை இயக்கலாம், எங்கெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் என்ற ஆவலோடு இரவுக் கனவுகளோடு நாட்களை கடத்தி வந்தான்.
ஒவ்வொரு நாளும் தான் கண்ட கனவுகளை தனது தாயிடம் கூறி மகிழ்ந்து வந்தான். தாயோ, நீ விரும்பியவாறே உனக்கு கப்பல் கிடைக்கும் என தன்னம்பிக்கை அளித்து வந்ததோடு மகனின் கனவை கணவனிடம் பகிர்ந்து கொண்டார்.
இதற்கு மேலும் தாமதிப்பது நல்லதல்ல என்றெண்ணிய தந்தை, ஒருநாள் திடீரென்று கப்பல் ஒன்றை மகனுக்காக வாங்கி விட்டதாக தெரிவித்தார். தாய்க்கும் மகனுக்கும் ஒரே அதிர்ச்சி. கப்பலை நாங்கள் பார்க்கவில்லையே? கடலில் செலுத்த உகந்த நல்ல கப்பலா? என்றெல்லாம் கேள்விக் கணைகளை தொடுத்தபடியே இருந்தனர்.
ஆத்திரம் அடைந்த தந்தையோ, எல்லாம் நல்ல கப்பல்தான். இதில்தான் அவன் பயணம் செய்ய வேண்டும் என திட்டவட்டமாக கூறிவிட்டார். மறுநாள் கப்பல் இருக்கும் இடத்திற்கு மகனை கூட்டிச் சென்ற போது அவனுக்கு பேரதிர்ச்சி.
கடலின் ஓரத்தில் நின்ற அது கப்பல் இல்லை, படகுத் தோணி என்று. இது கப்பலே இல்லை, இயந்திரம் இல்லாத வெறும் தோணி, இது கடல் பயணத்திற்கு உகந்தது அல்ல என எவ்வளவோ மன்றாடினான், அழுது புலம்பினான். ஆனால் அவனது புலம்பலை தந்தை கண்டு கொள்ளவில்லை.
அந்த தோணியில் மகனை ஏற்றி கடலிலும் தள்ளி விட்டார் அந்த தந்தை. கடலுக்குள் சிறிது தூரம் சென்றபிறகுதான் ஒவ்வொன்றாக தெரிய ஆரம்பித்தது அந்த வாலிபனுக்கு. தோணியை செலுத்தும் துடுப்பு பழுதடைந்திருப்பது. கரையை விட்டு வெகுதூரம் பயணித்தவனுக்கு மீண்டும் கரை நோக்கி திரும்பவும் முடியவில்லை. தோணியிலும் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை.
திமிங்கிலம், சுறா மீன் என நடுக்கடலுக்குள் ஏகப்பட்ட பிரச்னைகள். ஒரு கட்டத்தில் வாலிபனை விழுங்குவதற்காக தோணியை தாக்க தொடங்கியதில் தோணியிலும் ஓட்டை ஏற்பட்டது. குபுகுபுவென தண்ணீர் உள்ளேறியது. துடுப்பு போடுவதா? ஓட்டையை அடைப்பதா? துடுப்பு போடாவிட்டால் தோணி முன்னோட்டு செல்லாது. ஓட்டையை அடைக்காவிட்டால் தோணி மூழ்கிவிடும். தன்னை விழுங்க காத்திருக்கும் மீன்களுக்கு இரையாகி விடக் கூடும்.
என்ன செய்வதென்றே தெரியாமல் தோணியில் புகுந்த தண்ணீரை வெளியேற்றிவாறே ஒரு கையால் ஓட்டையையும் பொத்திக்கொண்டு நடுக்கடலில் தத்தளித்தான் அந்த வாலிபன். தோணியின் ஓட்டையை அடைத்தவாறே உயிர் பிழைக்கும் நாட்களை எண்ணிக் கொண்டே இருந்தான். காற்றின் திசையில் தோணியும் மெல்ல மெல்ல நகர்ந்து தான் விரும்பிய திசையில் இவனை இழுத்துச் சென்றது.
சோர்வும் பசிமயக்கமும் வெயிலும் குளிரும் மழையுமாக மாறி மாறி வாட்ட, தோணிப் பயணத்திலேயே வருடங்கள் கடந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை காப்பாற்ற யாருமே தென்படவில்லை. உதவிக்கரம் நீட்ட ஒரு கப்பல் கூட கண்ணில் படவில்லை. தோணியின் ஓட்டையை கைகளால் மாறி மாறி அடைத்து கைகள் ஊறிப்போய், சிறுசிறு மீன்கள் கடித்து ரணமாக மாறியிருந்தன.
இறப்பு ஒன்றுதான் இதற்கு தீர்வு. நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்த அவன், வழக்கம் போல கண்களை மூடி கடவுளை வேண்டினான். ஒன்று என் உயிரை எடுத்துக் கொள், இல்லையென்றால் இனியாவது ஒரு கப்பலைக் காட்டு என்றான்.அவரும் கருணை காட்டுவதாக தெரியவில்லை.
மனதளவில் தோணியோடும், கடவுளோடும் பகை கொண்டு சாவோடு போராடி வருடங்களை கடத்தியவனுக்கு, திடீரென்று ஒருநாள் தூக்கத்தில் இருந்து விழித்ததும் தூரத்தில் ஒரு அழகான கப்பல் நிற்பது போல மங்கலாக தெரிந்தது.
கப்பலை நோக்கி கைகளைக் கொண்டே தோணியை செலுத்தினான், ஆம் அது ஒரு அழகிய கப்பல், கம்பீரமான கட்டமைப்பு, அவன் கனவில் அவ்வப்போது தோன்றிய அதே கப்பலின் மாதிரி வடிவமாகத் தோன்றியது. மெல்ல கப்பலில் தொங்கிய ஏணி வழியாக ஏறிச் சென்று பார்த்தான்.
கப்பல் முழுவதும் ஓடினான், ஆடினான், பாடினான, ஆனந்த கூத்தாடினான். கப்பல் முழுவதையும் சுற்றிப்பார்த்தான். யாருமே அதில் இல்லை. இவ்வளவு அழகான கப்பலை நடுக்கடலில் விட்டுச் சென்றது யார்? என்பது இவனுக்கு பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
19 வயதில் இருந்து 20 வருடங்களுக்கு மேலாக இந்த கப்பலுக்காகத்தான் நாம் பயணித்தோமா? கடவுள் இந்த கப்பலை நமக்காகவே அனுப்பி இருக்கிறாரா? ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யமாக அவன் மனதிற்குள் கேள்விகள் நிழலாடின...
கப்பலை இயக்கும் மாலுமியின் அறைக்குச் சென்ற அவனுக்கு தலையே சுற்ற ஆரம்பித்து விட்டது...
(தொடரும்...)


